திங்கள், 9 ஜூன், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 1-6

அந்நாள்களில் கிலயாதில் குடியிருந்த திஸ்பே ஊரைச் சார்ந்த எலியா ஆகாபு அரசனிடம், �நான் பணியும் இஸ்ரயேலின் கடவுளான வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் வாக்கினாலன்றி, வரும் ஆண்டுகளில் பனியோ மழையோ பெய்யாது என்றார். பின்னர் ஆண்டவரின் வாக்கு எலியாவுக்கு வந்தது: �இங்கிருந்து ஓடிவிடு; கிழக்கு முகமாகப் போய் யோர்தானுக்கு அப்பாலுள்ள கெரீத்து ஓடையருகில் ஒளிந்து கொள். அந்த ஓடையில் தண்ணீர் குடித்துக்கொள். அங்கே உனக்கு உணவளிக்குமாறு காகங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன். அவ்வாறே அவர் போய் ஆண்டவரது வாக்கின்படி செய்தார். அவர் சென்று யோர்தானுக்கு அப்பாலிருந்த கெரீத்து ஓடையருகில் தங்கியிருந்தார். காகங்கள் காலையிலும் மாலையிலும் அப்பமும் இறைச்சியும் அவருக்குக் கொண்டு வந்தன. ஓடையில் தண்ணீர் குடித்துக் கொண்டார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: ``ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக