சனி, 13 டிசம்பர், 2014

ஏழு நவீன பாவங்கள்

ஏழு நவீன பாவங்கள்
திருச்சபையின் நீண்ட ஆன்மீக வரலாற்றின் அனுபவத்திலிருந்து பாவங்கள் அனைத்திலும் தலையான பாவங்களாக ஆணவம், பேராசை, பொறாமை, கோபம், மோகம், போசனப்பிரியம், சோம்பல் என்னும் ஏழு பாவங்களைப் பட்டியல் இட்டுத்தந்திருக்கின்றது. கடந்த 1500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஏழு தலையான பாவங்கள் நம் ஆன்ம ஆய்வுக்கும், பாவ அறிக்கைக்கும் பயன்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2008 ஆம் ஆண்டு புதியதாக இன்னும் ஏழு பாவங்களை நவீன பாவங்களாக வத்திக்கான் அறிவித்தது. உலக மயமாக்கலின் விளைவாக புதிய சமூகப் பாவங்கள் தோன்றியுள்ளன. எனினும், இந்தப் பாவங்கள் குறித்தும் உலகின் மனச்சான்றைத் தட்டி எழுப்பும் பணியைத் திருச்சபை தொடர்ந்து ஆற்றவேண்டும் என்றும் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அழைப்பு விடுத்தார். இதோ அந்த ஏழு நவீன பாவங்கள்.

1) சுற்றுச்சூழலை அழித்தல்
இன்று காடுகள் அழிக்கப்படுகின்றன. காற்றும் கடலும் மாசடைகின்றன. ஓசோன் படலத்தில் ஓட்டைகள் ஏற்பட்டுள்ளன. மனிதர்களின் பேராசைகளின் விளைவாக இயற்கையும், சூழலும் பாழ்பட்டு, வருங்காலத் தலைமுறையின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. இதனை இன்றைய சமூகப் பாவமாகப் பார்க்கிறது திருச்சபை.
2) உயிராற்றலோடு விளையாடுதல்
மரபணு சோதனைகள் மானிட மாண்பை அழித்துவிடக் கூடாது என்னும் திருச்சபையின் ஆதங்கத்தை இந்தப் பாவம் வெளிப்படுத்துகிறது. க்ளோனிங் முறையில் புதிய விலங்குகளை மட்டுமல்ல, புதிய மனிதர்களையும் உருவாக்குவது பல தீமைகளுக்கும், பாவங்களுக்கும் இட்டுச் செல்லும் என்று திருச்சபை அஞ்சுகின்றது.
3) அளவை மிஞ்சும் செல்வம்
நாடுகள், பன்னாட்டு நிறுவனங்கள், தனி நபர்கள் அளவுக்கதிகமான செல்வத்தைக் குவிப்பது ஒரு சமூகப் பாவம் என்று துணிச்சலுடன் அறிக்கையிடுகிறது திருச்சபை. தனி நபர்களிடமும், அரசுகளிடமும் குவிந்து கிடக்கும் செல்வம் சுரண்டலின் அடையாளம். பகிரப்படாத பணம் ஒரு பாவம் என்பது உலகமயமாக்கலுக்குப் பின் தேவையான ஒரு அறநெறிக் கொள்கை.
4) வறுமையை உருவாக்குதல்:
பகிரப்படாத செல்வமும், அறிவாற்றலும், தொழில் நுட்பமும், ஏழை, பணக்காரர் இடைவெளியை அதிகரித்து வறுமையை ஈன்றெடுக்கிறது. எனவே, வறுமையை உருவாக்கும் தொழிற் கொள்கைகள், நிதி ஒதுக்கீடுகள் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மானிடத்திற்கும், இறைவனுக்கும் எதிரானவர்கள் என்று இறைவாக்குரைக்கின்றது. திருச்சபை.
5) போதைப் பொருள் கடத்தல்:
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது போதை பொருள்கள் கடத்தப்படுவதும், இளையோர் அதைப் பயன்படுத்துவதும் அதிகமாகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், எதிர்கால சமூகம் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளாகப் போகிறது. இந்தப் பாவத்தை அரசுகள், மாஃபியா குழுக்கள், தீவிரவாதக் குழுக்கள், தனி நபர்கள் செய்கின்றனர்.
6) அறநெறிக்கு எதிரான அறிவியல் ஆய்வுகள்:
அறிவியல் ஆய்வுகள் மானிட வளர்ச்சிக்கு உதவவேண்டுமே தவிர, மாந்தர் மாண்பைச் சிதைக்கக் கூடாது என்பது திருச்சபையின் அறநெறி தொடர்பான போதனை. ஆனால், இன்று நடைபெறும் பலவிதமான ஆய்வுகள் கருவிலிருக்கும் குழந்தை முதல், தன் நினைவற்றுப் படுக்கையில் இருக்கும் நோயாளிகள் வரை மனித மாண்பைக் குறைக்கின்றன. இத்தகைய பாவம் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.
7) அடிப்படை மாந்த உரிமைகளை மீறல்:
அமெரிக்கா, எகிப்து, ஏமன், இலங்கை போன்ற நாடுகள் மாந்தர் உரிமைகள் அப்பட்டமாக மீறுகின்றன. நிறுவனங்களில், தொழிலகங்களில், சிறைச்சாலைகளில் பெண்களின், தொழிலாளர்களின், கைதிகளின் உரிமைகள் மீறப்படுகின்ற. தனி நபர்களும் தங்களோடு வாழும், பணியாற்றுவோரின் உரிமைகளை மீறுகின்றனர். இதுவும் ஒரு நவீன பாவம் என்று சொல்கிறது திருச்சபை.
நாம் என்ன செய்யலாம்? ஏழு நவீன பாவங்களில் சில பன்னாட்டு அளவிலான பாவங்களாகவும், சில தனிநபர் சார்ந்தவையாகவும் இருக்கின்றன. தனிப்பட்ட முறையில் நாம் எதுவும் செய்ய இயலுமா என்று நாம் மலைக்கலாம். ஆனால், நாம் செய்யக்கூடியவை பல இருக்கின்றன. முதலில், இந்த நவீன பாவங்கள் குறித்து விழிப்புணர்வு கொள்வோம். கருத்துப் பரவல் செய்வோம். நமது குடும்ப செபத்தில், குழு செபத்தில் பங்கு வழிபாடுகளில் இறைவேண்டல் செய்வோம். நம்மால் இயன்றவரை இயற்கையைப் பாதுகாப்போம். வெப்பமயமாதலைத் தடுப்போம். சுற்றுச் சூழல் போராளிகளுக்கு ஆதரவளிப்போம். செல்வத்தின் மீது, பொருள்கள் மீது பற்று குறைப்போம். அதிக பொருள் ஆசை, பண ஆசை, தவிர்ப்போம். மனநிறைவு மனநிலையை வளர்ப்போம். பிறரோடு பகிர்வோம். அறச்செயல்களில் ஈடுபடுவோம். பகிர்வு செய்வோம். தன் கட்டுப்பாட்டில் வளர்வோம். மாந்தர் உரிமைகளை மதிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக