வியாழன், 11 டிசம்பர், 2014

இன்றைய வாசகம்.

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 41: 13-20
நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; உன் வலக்கையைப் பற்றிப்பிடித்து, �அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்'' என்று உன்னிடம் சொல்பவரும் நானே. �யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு; நான் உனக்குத் துணையாய் இருப்பேன்,'' என்கிறார் ஆண்டவர்.
இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர். இதோ, நான் உன்னைப் புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன். நீ மலைகளைப் போரடித்து நொறுக்குவாய்; குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய். அவற்றைத் தூற்றுவாய், காற்று அவற்றை வாரிக்கொண்டுபோகும்; புயல் அவற்றைச் சிதறடிக்கும்; ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்; இஸ்ரயேலின் தூயவரில் மேன்மை அடைவாய். ஏழைகளும் வறியோரும் நீரைத் தேடுகின்றனர்; அது கிடைக்கவில்லை. அவர்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றனர்; ஆண்டவராகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்; இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன். பொட்டல் மேடுகளைப் பிளந்து ஆறுகள் தோன்றச் செய்வேன்; பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்; பாலைநிலத்தை நீர்த் தடாகங்களாகவும் வறண்ட நிலத்தை நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன். பாலைநிலத்தில் கேதுரு மரங்களை வளரச் செய்வேன்; சித்திம் மரம், மிருதுச் செடி, ஒலிவ மரம் ஆகியன தோன்றச் செய்வேன்; பாழ்நிலத்தில் தேவதாரு மரங்களையும், புன்னை மரங்களையும், ஊசியிலை மரங்களையும் வைப்பேன். அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால் இதைச் செய்தார் என்றும், இஸ்ரயேலின் தூயவர் அதைப் படைத்தார் என்றும் மக்கள் கண்டு உணர்ந்துகொள்வர்; ஒருங்கே சிந்தித்துப் புரிந்துகொள்வர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்தி வாசகம்

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 11-15


அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: �மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன. உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக