வெள்ளி, 21 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

 ஆண்டின் பொதுக்காலம் 33 வெள்ளி

முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 10: 8-11

சகோதரர் சகோதரிகளே, விண்ணகத்திலிருந்து நான் கேட்ட குரல் என்னிடம் மீண்டும் பேசி, ``கடலின்மீதும் நிலத்தின்மீதும் நிற்கின்ற வானதூதரின் கையில் உள்ள பிரிக்கப்பட்ட சுருளேட்டை நீ போய் வாங்கிக்கொள்'' என்றது. நானும் அந்த வானதூதரிடம் சென்று, அந்தச் சிற்றேட்டை என்னிடம் தரும்படி கேட்டேன். அவரோ, ``இதை எடுத்துத் தின்றுவிடு; இது உன் வயிற்றில் கசக்கும், ஆனால் வாயில் தேனைப் போல் இனிக்கும்'' என்று என்னிடம் சொன்னார். உடனே வானதூதரின் கையிலிருந்து அந்தச் சிற்றேட்டை எடுத்துத் தின்றேன். அது என் வாயில் தேனைப் போல் இனித்தது; ஆனால் அதைத் தின்றபொழுது என் வயிற்றில் கசந்தது. ``பல்வேறு மக்களினத்தார், நாட்டினர், மொழியினர், மன்னர் பற்றி நீ மீண்டும் இறைவாக்கு உரைக்க வேண்டும்'' என்று எனக்குச் சொல்லப் பட்டது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 45-48

அக்காலத்தில் இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார். அவர்களிடம், `` `என் இல்லம் இறைவேண்டலின் வீடு' என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்'' என்று கூறினார். இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள். ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக