சனி, 15 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

ஆண்டின் பொதுக்காலம் 32 வாரம் சனி 
முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய மூன்றாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5-8

அன்பார்ந்தவரே, நீர் சகோதரர்களுக்கு, அதுவும் அறிமுகமில்லாச் சகோதரர்களுக்குச் செய்தவற்றையெல்லாம் பார்க்கும்போது நீர் நம்பிக்கைக்கு உரியவர் என்பது தெளிவாகிறது. அவர்கள் திருச்சபையின் முன்னிலையில் உமது அன்பைக் குறித்துச் சான்று பகர்ந்தார்கள். எனவே நீர் அவர்களைக் கடவுளுக்கு உகந்த முறையில் வழியனுப்பி வைத்தால் நல்லது. ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவுக்காகப் பயணம் மேற்கொண்டவர்கள். பிற மக்களிடமிருந்து அவர்கள் வழியில் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. இத்தகையோருக்கு உதவுவது நமது கடமை. இவ்வாறு, உண்மைக்காக உழைக்கும் அவர்களின் உடன் உழைப்பாளர் ஆகிறோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. 

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8

அக்காலத்தில் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். ``ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், `என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், `நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார்' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.'' பின் ஆண்டவர் அவர்களிடம், ``நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னார் என்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக