செவ்வாய், 8 ஏப்ரல், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9 

அந்நாள்களில் ஏதோம் நாட்டைச் சுற்றிப்போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ரயேலர் `செங்கடல் சாலை' வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமை இழந்தனர். மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: ``இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது'' என்றனர். உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, ``நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றிவிடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக்கொள்ளும்'' என்றனர். அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார். அப்போது ஆண்டவர் மோசேயிடம், ``கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்'' என்றார். அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. 

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 21-30

அக்காலத்தில் இயேசு பரிசேயர்களை நோக்கி, ``நான் போனபின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்'' என்றார். யூதர்கள், `` `நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது' என்று சொல்கிறாரே, ஒருவேளை தற்கொலை செய்துகொள்ளப்போகிறாரோ?'' என்று பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், ``நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல. ஆகவேதான் நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன். `இருக்கிறவர் நானே' என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்'' என்றார். அவர்கள், ``நீர் யார்?'' என்று அவரிடம் கேட்டார்கள். அவர், ``நான் யார் என்று தொடக்கத்திலிருந்தே சொல்லி வந்துள்ளேன். உங்களைப் பற்றிப் பேசுவதற்கும் தீர்ப்பிடுவதற்கும் பல உண்டு. ஆனால் என்னை அனுப்பியவர் உண்மையானவர். நானும் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகுக்கு எடுத்துரைக்கிறேன்'' என்றார். தந்தையைப் பற்றியே அவர் பேசினார் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், ``நீங்கள் மானிடமகனை உயர்த்தியபின்பு, `இருக்கிறவர் நானே'; நானாக எதையும் செய்வதில்லை; மாறாகத் தந்தை கற்றுத்தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வீர்கள். என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்'' என்றார். அவர் இவற்றைச் சொன்னபோது பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக