சனி, 1 மார்ச், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 13-20

உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்; மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும். உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார். ஆகவே ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்துகொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும். எலியா நம்மைப் போன்ற எளிமையான மனிதர்தாம். அவர் மழை பெய்யக் கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டினார்; மூன்று ஆண்டு ஆறு மாதம் மழையில்லாது போயிற்று. மீண்டும் அவர் இறைவனிடம் வேண்டினார்; வானம் பொழிந்தது, நிலம் விளைந்தது. என் சகோதரர் சகோதரிகளே, உங்களுள் ஒருவர் உண்மையை விட்டு நெறி தவறி அலையும்போது, வேறொருவர் அவரை மனந்திரும்பச் செய்தால், தவறான நெறியிலிருந்து மனந்திருப்புகிறவர் அவரை அழிவிலிருந்து மீட்பார் என்பதையும் திரளான பாவங்களைப் போக்குவார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16
அக்காலத்தில் சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, ``சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக